துறை மாற்றி பதிவு செய்வதால் பயனாளிகள் அலைக்கழிப்பு
தேனி: அரசு திட்டங்களை பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கும் போது இ சேவை, பொது சேவை மையங்களில் துறைகள் மாற்றி பதிவதால் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
மத்திய, மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்துகிறது.
ஒரு சிலர் அலைபேசி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் அரசு, தனியார் இசேவை மையங்களை அணுகின்றனர். இதில் ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், சில சேவை மையங்களில் துறைகள் மாற்றி பதிவு செய்கின்றனர்.
இதனால் பயனாளிகள் திட்ட பயனை பெற சிக்கல் ஏற்படுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு நேரில் சென்ற பின் இந்த விஷயங்கள் தெரிகிறது. பின் மீண்டும் வேறு சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்: இலவச தையல் இயந்திரம் ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகளால் வழங்கப்படுகிறது. இதில் பலர் மாற்றி பதிவு செய்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை இரு துறைகள் மூலம் வழங்கப்படுகிறது. இவையும் மாற்றி பதிவு செய்யப்படுகின்றன. இதனால் பயனாளிகள் பயன் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.
இசேவை, பொது சேவை மையங்கள் நடத்துவோருக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.