Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

இருளில் முழ்கிய வடக்கு மலை கிராமம் மின்வசதி இன்றி விவசாயிகள் சிரமம்

இருளில் மூழ்கி கிடக்கும் போடி வடக்கு மலை – அத்தியூத்து மலைக் கிராம வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வடக்குமலை கிராமம். அத்தியூத்து, இலங்காவரிசை, வலசத்துறை, சித்தாறு, உரல்மெத்து, சாமி வாய்க்கால், போதன் ஓடை உள்ளிட்ட உட்கடை மலைக் கிராமங்கள் அடங்கி உள்ளன. போடி மலை அடிவாரத்தில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் வடக்குமலை கிராமம் உள்ளது. 300 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 100 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி செலுத்தியும் மின் வசதி இல்லாமல் உள்ளது. காபி, மிளகு, இலவம், ஏலக்காய், மா போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். மருத்துவ வசதி பெற 12 கி.மீ., கடந்து போடிக்கு வர வேண்டும்.

ரோடு வசதி இன்றி விளை பொருட்களை கொண்டு வர விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இப்பகுதியில் புதிய ரோடு அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மூலம் வன ஒப்படைப்பு செய்ய 12 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின் ரோடு அமைக்க வில்லை.

விவசாயிகள் ரோடு வசதி கோரி மேற்கொண்ட தொடர் முயற்சியால் மகாத்மா தேசிய காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வலசத்துறை – அத்தியூத்து வரை ஒரு கி.மீ., தூரம் ரோடு அமைக்க கலெக்டர் ஷஜீவனா ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தற்போது ரோடு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மலை கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம், தெரு விளக்கு இன்றி இருளில் மூழ்கியுள்ளது. இரவில் மலை கிராமங்களில் எதிர்பாராத விதமாக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவ வசதி பெற போடிக்கு கொண்டு வருவதில் சிரமம் அடைகின்றனர். மலை கிராம மக்களின் வாழ்வில் ஒளி பெற மின்வசதி அல்லது தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *