பழைமையான இரும்பு பாலத்தில் பள்ளம்
மூணாறு தபால் அலுவலகம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த இரும்பு பாலத்தில் பள்ளம் ஏற்பட்டதால் பலம் இழந்து சேதமடைய வாய்ப்புள்ளது.
மூணாறு நகரில் தபால் அலுவலகம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் ராணுவனத்தினர் அமைக்கும் ‘பெய்லி’ மாதிரியில் இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. பழைமை வாய்ந்த பாலம் மூணாறில் இருந்து தமிழகத்தில் தேனி, மதுரை, திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களுக்கும், டாப் ஸ்டேஷன், வட்டவடை உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும் செல்ல முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் இரும்புகள் துருபிடித்து பாலம் பலம் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அதன் அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் பாலம் கட்டப்பட்டு, இரும்பு பாலம் ஒரு வழி பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் பாலத்தில் குழி ஏற்பட்டது. தடி மரங்கள் ஏற்றிய லாரி மற்றும் கனரக வாகனங்கள் உள்பட தினமும் நூற்றுக் கணக்கில் வாகனங்கள் பாலத்தில் கடந்து செல்வதால் சேதமடைய வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.