கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் கணவர் கைது; மனைவி மாயம்
தேனி: தேனி டொம்புச்சேரி வடக்குக் காலனி கூலித் தொழிலாளி முருகன் 38. இவரின் தந்தை ராசு,சில ஆண்டுகளுக்கு முன் அதேப் பகுதியில் உள்ள பொன்னையாவிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் பெற்றார்.
இதற்கான 10 சதவீத வட்டியை ராசுவால், பொன்னையாவிடம் தர முடியவில்லை. இதனால் அவரது மகன் முருகன் 38, வட்டியும் முதலுமாக ரூ.1 லட்சம் தருகிறேன் என எழுதிக் கொடுத்துள்ளார்.
பொன்னையா மகன் காத்தமுத்து, முருகனிடம் பலமுறை பணத்தை திருப்பித்தர கோரியும் பணம் வழங்க வில்லை.
இதனால் முருகனை, காத்தமுத்து, அவரது மனைவி சித்ரா ஆகியோர் ஜாதியை கூறி இழிவாக பேசி, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
முருகன் புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் காத்தமுத்து, அவரது மனைவி சித்ரா மீது வன்கொடுமை மற்றும் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, காத்தமுத்துவை கைது செய்தனர். தலைமறைவான சித்ராவை தேடி வருகின்றனர்.