ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும் சீரமைக்கப்படாத கூட்டாறு பாலம்
லோயர்கேம்ப் கூட்டாறு பாலம் சேதமடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் பொதுப் பணித்துறையினர் சீரமைக்காததால் விவசாயிகளுக்கு பாதிப்பு தொடர்கிறது.
கூடலுார் அருகே லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து வாய்க்காலின் துவக்க பகுதியில் கூட்டாறு பாலம் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கனமழையால் பாலம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பாலத்தில் இருந்து கண்மாய் வரையுள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் பலமுறை பொதுப் பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதை சீரமைக்காமல் மாற்று ஏற்பாடாக 18ம் கால்வாயில் இருந்து தண்ணீர் வரும் வகையில் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கமாக கூட்டாறு பாலம் வழியாக நீர்வரத்து இருக்கும்போது வாய்க்காலின் இரு பகுதிகளிலும் உள்ள மானாவாரி நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தால் பயன் பெற்று வந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்க்கால் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் புலம்பி உள்ளனர். பாலத்தை சீரமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு வழிவகை செய்யும் வகையில் பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வழியுறுத்தி உள்ளனர்.