வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு அலுவலகம் முன் பெருந்திரள்
வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி அரசு அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் தகவல்
”தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் செப்., 19ல் அனைத்து அரசு அலுவலங்கள் முன் பெருந்திரள் முறையீடு நடத்தப்படும்,” என தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க பொது செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கூட்டரங்கில் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் டேனியல் ஜெயசிங் தலைமையில் நடந்தது. முன்னிலை வகித்த பொது செயலாளர் செல்வம் பின் கூறியதாவது:
2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்றனர். மேலும் ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை தீர்த்துவைப்பேன் எனவும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து ஓட்டளித்தோம். ஆனால் முதல்வராகி 40 மாதங்கள் கடந்த பின்பும் கொடுத்த வாக்குறுதிப்படி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஒன்றைக்கூட செயல்படுத்தாமல் முதல்வர் மவுனமாக இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்கள் முன் செப்., 19ல் பெருந்திரள் முறையீடு நடத்தப்படும்.
அடுத்தகட்டமாக அக்.,8 மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர தர்ணா நடத்தப்படும்.
சங்க 15வது மாநில மாநாடு டிச., 13, 14ல் துாத்துக்குடியில் நடத்தவும், முதல்வர் ஸ்டாலினை அழைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.