ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் தேர் பவனி திருவிழா கோலாகலம்; ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்பு
ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச் தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி பங்கேற்றார்.123 ஆண்டுகளில் முதன் முறையாக மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது.
தென் மாவட்டங்களில் ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச் மிகவும் பழமையானது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பனிமய மாதா சர்ச்களில் ஆகஸ்டில் அன்னை தேர்ப்பவனி நடைபெறும்.
தமிழகத்தில் தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி மரத்திலான தேரில் நடைபெறுகிறது. மற்ற ஊர்களில் சப்பரத்தில் டிராக்டரில் நடைபெறும். ராயப்பன் பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டர் மூலம் நடைபெற்று வந்தது.
தற்போது ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நடந்த சிறப்பு பிரார்த்தனைகள் நிறைவு பெற்று முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் இரவு தேர்ப்பவனி நடந்தது.
தேர்ப்பவனி துவங்கியதும் சர்ச்சில் உள்ள பெரிய மணி ஒலிக்கத் துவங்கியது. இந்த சர்ச்சின் மணியோசை சுற்றிலும் 10 கி.மீ. சுற்றளவிற்கு கேட்கும். முன்னதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி பங்கேற்று நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார்.
சரியாக நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு எம்.பி., தங்க தமிழ்செல்வன், எம்.எல் ஏ , ராமகிருஷ்ணன். முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், விஜயராசன், விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணன், பாதிரியார் ஞானப்பிரகாசம், கிராம கமிட்டித் தலைவர் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் பனிமயமாத புதிய மரத்திலான தேரில் ஏறி பவனி வந்தார். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பனிமய மாத தேரோட்டத்தை வீதியெங்கும் பொது மக்கள் திரண்டு நின்று பார்த்து, பிரார்த்தனை செய்தனர். முன்னதாக அனைத்து மத, ஜாதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். நிகழ்வில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.
ஏற்பாடுகளை கிராம கமிட்டி, பனிமலர் தொண்டு நிறுவனம், அன்பியங்கள், பாதிரியார்கள், இளையோர் இயக்கம், பக்த சபையினர் செய்திருந்தனர்.