தேனி மாவட்ட அணைகளில் மின் உற்பத்திக்கு ஏற்பாடு! ஆய்வுப் பணிகளை துவக்க மின்வாரியம் முடிவு
மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வாய்ப்புக்கள் குறித்து ஆய்வு நடத்த மின்வாரியம் ஏற்பாடு செய்து வரும் நிலையில், அதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளன.
மின்சாரம் நீர், நிலக்கரி, அணு, காற்றாலை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. பெருகி வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக தற்போது நல்ல காற்று வீசி வருகிறது. எனவே காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. மின் நுகர்வும் அதிகமாக உள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ, அத்தனை வழிமுறைகளையும் பின்பற்ற அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர முல்லைப் பெரியாற்றில் குருவனுாத்து பாலம், குள்ளப்ப கவுண்டன்பட்டி, வைகை அணை போன்ற இடங்களில் மைக்ரோ மின் நிலையங்கள் மூலம் குறைந்த மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
தற்போது இந்த இடங்களை தவிர்த்து சண்முகா நதி அணை 52.5 அடி, மஞ்சளாறு அணை 57 அடி, – சோத்துப்பாறை அணை 126 அடி கொள்ளளவு கொண்டது.
இந்த 3 அணைப் பகுதிகளிலும் மின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி மின்வாரியம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. வைகை அணையில் உள்ளதை போன்று அமைக்கலாமா அல்லது கூடுதல் மெகாவாட் மின் உற்பத்திக்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றிய ஆய்வு நடத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.