Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

அ.தி.மு.க., தலைவராகும் தகுதி பன்னீர்செல்வத்திற்கு உண்டு சொல்கிறார் அமர்பிரசாத் ரெட்டி

”அ.தி.மு.க., தலைவராகும் தகுதி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே உண்டு என அக்கட்சியின் தொண்டர்களே கூறி வருகின்றனர்,” என, தேனியில் நடந்த பா.ஜ., விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற அப்பிரிவின் மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்து திட்ட அறிக்கை சரியாக வழங்காததால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது. தி.மு.க., அரசு ஊழல் நிறைந்தது. அமைச்சராக இருந்தவர் சிறையில் உள்ளார். பலரின் மீது வழக்கு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. கேள்வி கேட்டால் ‘குண்டாஸ்’ என்ற நிலை உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., சார்பில் யாத்திரை நடத்த உள்ளோம். அதுகுறித்த அறிவிப்பை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமிக்கு இருந்த மவுசு குறைந்து விட்டது.

தமிழக மக்கள் பா.ஜ., விற்கு எதிர்கட்சி அந்தஸ்து வழங்கி உள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் ஸ்டாலினிடம் பேசியது அரசியல் நாகரிகம். துரோகத்தின் மறு பெயர் பழனிசாமி. அவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். தி.மு.க., வை எதிர்க்கும் சக்தி பா.ஜ., விற்கு மட்டும் உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *