எலுமிச்சை பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை
தேனி மாவட்டம் கம்பத்தில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.200 சில்லரை வணிகத்தில் விற்பனையானது.
கோயில் திருவிழா, திருமணம் என அனைத்து விசேஷங்களுக்கும் எலுமிச்சை பழம் பயன்படுகிறது. ஆண்டு முழுதுவம் வரத்து இருந்தாலும் நவம்பர், டிசம்பரில் மட்டும் வரத்து குறையும், செப்டம்பரில் வரத்து ஆரம்பமாகி அக்டோபர் கடைசி வரை இருக்கும்.
கம்பத்தில் வரத்து குறைவால் விலை கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதுகுறித்து கம்பம் எலுமிச்சை வியாபாரி முருகன் கூறுகையில், ‘தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடியில் அதிகம் சாகுபடியாகிறது. தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு வரத்து குறைவால் விலை கிலோ ரூ.200 ஆக உயர்ந்து நேற்று விற்பனையானது. ஆந்திராவில் இருந்தும் எலுமிச்சை வரத்து குறைந்துள்ளது. அதே சமயம் தேவை அதிகரித்து வருகிறது. இன்னமும் 10 நாட்களில் வரத்து சீராக வாய்ப்புள்ளது.’, என்றார்.