கேட்ட வரம் தரும் சுருளி வேலப்பர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் கம்பத்தில் விழாக்கோலம்
கேட்பவருக்கு கேட்ட வரம் தரும் கம்பம் சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று (ஆக.22ல்) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இக் கோயில் கம்பம் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கி.மு. 1211 ம் ஆண்டில் பாண்டிய மன்னர் ஜெயராஜ பாண்டிய ராஜா கட்டியதாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது.
இங்குள்ள சுருளிமலையில் தனது தந்தை கைலாசநாதருடன் (சிவபெருமான்) கோபித்து கொண்டு ஆண்டி கோலத்தில் இக் கோயில் இருக்கும் இடத்தில் மரத்தடியில் ஒற்றை வேலுடன் காட்சியளித்ததாக கூறுகின்றனர். ஜக்கைய முத்துவேல் ஆசாரியார் குடும்பத்தினர் கோயிலை நிர்வகித்து வந்துள்ளனர்.
1992 ல் மூலஸ்தானம் நீங்கலாக முன் மண்டபம் இடித்து கோயில் கட்டப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் சித்திரை மாதம் முதல் தேதிக்கு முன்பு 10 நாட்கள் மண்டகப்படி நடத்தி சித்திரை முதல் நாள் உற்ஸவ மூர்த்தியை ஊர்வலமாக சுருளிமலைக்கு எடுத்து சென்று அவரது தந்தை கைலாசநாதருடன் ஒரு நாள் தங்க வைத்து மீண்டும் கம்பம் கோயிலிற்கு கொண்டு வரும் வழக்கம் இருந்துள்ளது.
மேலும் கார்த்திகை தினத்தில் பாலதண்டாயுத பாணியின் தாயார்களான கார்த்திகை பெண்களுக்கு வழிபாடு நடத்துவது பிரபலமாகும்.
கந்த சஷ்டி விழா சிறப்பு
பால தண்டாயுதபாணியாக இருந்தவரின் இடது, வலது பக்கம் வள்ளி தெய்வானையை இடைக்காலத்தில் தவறுதலாக பிரதிஷ்டை செய்து விட்டனர்.
பின்னர் முருக பக்த சபையினர் முயற்சியில் வள்ளி தெய்வானை தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவராக பால முருகன் மட்டுமே இன்று உள்ளார். எனவே தான் இங்கு திருமணம் நடைபெறுவது இல்லை.
வேறு இடங்களில் திருமணம் முடித்து மணமக்கள் மணக்கோலத்தில் இங்கு வந்து அபிஷேகம் செய்வார்கள்.
இந்த கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாகும். சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு கேட்கும் வரத்தை தருகிறார்.
கடந்த 1991 ல் காமயகவுண்டன்பட்டி மறைந்த ராமராஜ் கவுடர் இரண்டாவது கும்பாபிஷேகத்தை நடத்தினார். 2007 ல் முருக பக்த சபை தலைவரும் அப்போதும், இப்போதும் எம்.எல்.ஏ-வாக இருக்கும் என். ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த கோயிலில் சிவன் பார்வதிக்கு தனி மண்டபம், விநாயகர், நவக்கிரங்கள், பைரவர், வள்ளி தெய்வானையுடன் முருகன் தனி மூலஸ்தனம் கட்டி கடந்த 2009 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள்
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்று ஆக., 19 ல் கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இன்று ( ஆக. 22 ) அதிகாலை 5:45 மணிக்கு சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் நான்காம் கால யாக வேள்விகள் துவங்கியது . ருத்ர ஜெபம், வேத பாராயணம் காலை 8:30 மணிக்கு கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதல் நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு கனி, மூலிகை வேள்வி, நிறையவி களித்தல்.
போரொளி வழிபாடு, புனித நீர் குட யாத்திரை அனுமதி பெறுதல் நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருப்பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை முருக பக்த சபை தலைவரும், எம்.எல்.ஏ. வுமான என்.ராமகிருஷ்ணன் தலைமையில் முருக பக்த சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபாபிஷேகத்திற்கு பின் அன்னதானம் நடைபெறுகிறது.