Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

மதுரை—போடி அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் சோதனை விரைவில் வேகம் அதிகரிக்க வாய்ப்பு

மதுரை– போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில் நேற்று 120 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடந்தது.

மதுரை — போடி இடையே 2023 அக்.12ல் 110 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் மதுரை — போடி வழித்தடம் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டதால் 2024 மார்ச் 23 ல் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பின் வழித்தட பணிகள் மூன்று மாதங்களாக நடந்தன.

பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஜூன் 16 ல் மதுரையில் இருந்து 121 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 7 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. இந்த ஆய்வு ரயிலில் கணினி, ஜி.பி.எஸ்., கருவியுடன் கூடிய அகல ரயில் பாதையில் அதிர்வுகளை கண்டறியும் ‘ஆசிலேசன் மானிட்டரிங் சிஸ்டம் ‘ (Oscillation Monitoring System) என்ற தொழில் நுட்பத்துடன் மதுரை – -போடி வழித்தடத்தில் 121 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் அதிர்வுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று மதுரையில் இருந்து மதியம் 2:10 மணிக்கு புறப்பட்ட சோதனை ஓட்ட ரயில் மதியம் 3:15 மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் 3 பெட்டிகளுடன் ஒரு மணி நேரம் 5 நிமிடங்களில் போடி ரயில்வே ஸ்டேஷன் வந்தது. மறுமார்க்கத்தில் 90 கி.மீ., வேகத்தில் மாலை 4:18 மணிக்கு மதுரை புறப்பட்டு சென்றது.

ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்த பின் விரைவில் அதிவிரைவு, பயணிகள் விரைவு ரயில்களின் வேகம் அதிகரித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *