உடல் உறுப்பு தான தின விழிப்புணர்வு மினி மாரத்தான்
இந்திய உடல் உறுப்புதான தினம் ஆக., 3 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி தபால் கோட்டத்தின் சார்பில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.
2024 ஜூலை முழுவதும் உடலுறுப்பு தான மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி தபால் கோட்டம் சார்பில், ‘மினி மாராத்தான்’ ஓட்டம் நேற்று நடந்தது.
தேனி தலைமை தபால் நிலைய வளாகத்தில் துவங்கிய ஓட்டத்தை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் உடலுறுப்பு தான பதிவு டாக்டர் சிவக்குமரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டம் பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி வழியாக பழைய ஜி.ஹெச்., ரோடு, சமதர்மபுரம் வழியாக கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தில் நாடார் சரஸ்வதி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், தபால்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
அனைவரும் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, கோஷங்கள் எழுப்பிச் சென்றனர்.