ஊருக்குள் புகுந்த கரடியை கண்டு பிடிக்க முடியாமல் வனத்துறை திணறல் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் ஊருக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பதுங்கிய இடத்தை வனத்துறை கண்டுபிடிக்க முடியாத நிலையில் கரடி தன்னிச்சையாக வனப்பகுதிக்குள் சென்றது.
ஆண்டிபட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நாழிமலை, டி.புதூர் கரடு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து பாதை மாறி வந்த கரடி டி.சுப்புலாபுரம் ஊருக்குள் புகுந்து டி.சுப்புலாபுரம் – ராஜகோபாலன்பட்டி ரோடு வழியாக சென்றது. இதனை கண்ட சில பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் கொஞ்சநேரத்தில் கரடி மாயமானது.
இதனால் கரடி பதுங்கிய் இடத்தை அறிய முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் இரு குழுக்களாக கரடி சென்ற இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் 2:00 மணி அளவில் ஒதுக்குப்புறமான பகுதியில் நாய்கள் அதிகம் குறைத்துள்ளது.
அப்போது அந்த வழியாக கரடி சென்றதாக அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் டி.புதூர் கரடு பகுதியில் தீவிர தேடுதல் மேற்கொண்டனர்.
கரடியை பாதுகாப்பாக பிடிப்பதற்கு கூண்டுடன், கால்நடை டாக்டர் குழுவும் தயார் நிலையில் இருந்தது.
ஆனால் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறையினர் கண்ணில் படாமல் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்று மாயமானது. பொது மக்களின் அச்சத்தை தவிர்க்க வனத்துறையினர் ஊருக்கு ஒதுக்குப்புறமான வனப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.