கண்மாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தும் அகற்றாத அவலம் அணைக்கரைப்பட்டி காதார் பாட்ஷா கண்மாய் விவசாயிகள் அவதி
போடி: போடி, அணைக்கரைப்பட்டி காதர் பாட்ஷா கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்தும் பல ஆண்டுகள் ஆகியும் அகற்றாமல் அதிகாரிகள் தாமதம் செய்வதால் மழைநீரை முழுமையாக தேக்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கோம்பை புலத்தில் காதர் பாட்ஷா கண்மாய் (துலக்கன்குளம் கண்மாய்) 25 ஏக்கரில் அமைந்துள்ளது.
முத்துக்கோம்பை, சின்ன முடக்கு, பெரிய முடக்கு உட்பட பகுதிகளில் இலவம், மா, தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
இக்கண்மாய் மூலம் 250 ஏக்கர் நேரடி பாசனமும், 300 ஏக்கர் மறைமுக பாசனம் மூலம் விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர்.
கண்மாய் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி தற்போது 5 ஏக்கர் அளவு கூட இல்லாமல் பரப்பளவு சுருங்கி உள்ளது.
இதனால் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பணைகள் சேதம் அடைந்துள்ளதால் விளைநிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை முழுமையாக சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 ஆண்டுகளாக நிரம்பாத கண்மாய்
கண்ணன், விவசாயி, அணைக்கரைப்பட்டி: காதர் பாட்ஷா கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள்.
கண்மாயில் நீர் முழுமையாக தேங்கி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை மூலம் சர்வே செய்து கற்கள் ஊன்றினர்.
பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் மழை நீரை கண்மாயில் சேமிக்க முடியவில்லை. மழை நீர் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைத்து, நீரை தேக்கிட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கண்மாயை முறையாக சர்வே மேற்கொண்டு ஆழப்படுத்தி தூர்வாரி, மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பையால் மூடப்பட்ட ஷட்டர்
ராஜா, விவசாயி, அணைக்கரைப்பட்டி: இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் முத்துக்கோம்பை, சின்னமுடக்கு, பெரிய முடக்கு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன் பெறுவர். கண்மாயில் மூட்செடிகள் வளர்ந்தும் தடுப்பணைகள் சேதம் அடைந்து உள்ளது.
ஷட்டர் பழுதானதால் குப்பையால் மூடப்பட்டு உள்ளன. இதனால் மழை நீரை முழுமையாக கண்மாயில் தேக்க முடியாமல் நீர் வெளியேறி விடுகிறது.
கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றி, தூர்வாரினால் விவசாய நிலங்களில் நீர் மட்டம் உயரும். அணைக்கரைப்பட்டிக்கு குடிநீர் விநியோகத்திற்கு பயனாக இருக்கும்.
துார்வார பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.