‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் குடிநீர் வழங்க முடியாமல் திணறல்
தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் வழங்க முடியாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன.
தேனி ஒன்றியம், அரண்மனைப்புதுார், ஊஞ்சாம்பட்டி, கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், காட்டுநாயக்கன்பட்டி, உப்பார்பட்டி என 18 ஊராட்சிகள் உள்ளன.
இதில் அனைத்து ஊராட்சிகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தில் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. கொடுவிலார்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புத்தொகை வழங்கவில்லை என வீடுகளுக்கு வழங்கிய குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால், ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பல இடங்களில் குழாய் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. சில ஊராட்சி பகுதிகளில் குழாய் அமைக்கும் பணி அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டள்ளது.
சில ஊராட்சிகளுக்கு ஆற்றில் உறைகிணறு மூலம் நீர் எடுத்து வழங்கப்படுகிறது.
சில ஊராட்சிகளுக்கு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கும் நீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றி வினியோகிக்கப்படுகிறது.
இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் சுத்தகரித்து வழங்குவது இல்லை.
தினசரி குடிநீர் வழங்க இயலாமல், மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. சில இடங்களில் வீட்டு உபயோக நீர் மட்டும் வழங்கப்படுகிறது.
ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கியும், வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பிடித்தும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் மூலம் தினமும் சுத்திகரித்த குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.