பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத பஸ்களால் இடையூறு
மதுரை, தேனி பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டியை கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
குமுளி, கூடலூர், கம்பம், போடி, தேனி பகுதியில் இருந்து உசிலம்பட்டி மதுரை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தினமும் 500க்கும் மேற்பட்ட முறை ஆண்டிபட்டியை கடந்து செல்கிறது.
இதேபோல் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வழியாக தேனி, பெரியகுளம், கம்பம், போடி உட்பட பல ஊர்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கிறது. ஆண்டிபட்டியை கடந்து செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்கி செல்வதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பல நேரங்களில் ரோட்டில் எதிர்த் திசையில் வாகனங்களை நிறுத்தி எந்த வாகனமும் செல்ல முடியாதவாறு ரோட்டை அடைத்து விடுகின்றனர். ஒரு சில நிமிடங்கள் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு சரியாக நீண்ட நேரம் ஆகிறது.
அடிக்கடி இப்பிரச்சனை தொடர்வதால் எந்நேரமும் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்கள் வரை அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்பி வந்தது. சமீபமாக பஸ்களை வெளியில் நிறுத்தி இடையூறு செய்கின்றனர். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்துகின்றனர்.
இதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து பஸ்களையும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்புவதற்கு போலீசார், மற்றும் போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.