தீர்மானம் நிறைவேற்ற நாளை சிறப்பு கூட்டம் : கம்பம் நகராட்சியுடன் மூன்று ஊராட்சிகள் இணைப்பு
கம்பம்,: சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஊராட்சிகளையும், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பேரூராட்சிகளின் ஒரு பகுதியையும், கம்பம் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென நகராட்சியில் சிறப்பு கூட்டம் நாளை (டிச. 11) நடைபெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புக்களின் எல்லைகளை மறுவரையறை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளாகவும், பெரியபேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி – பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தற்போது கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, ஆங்கூர் பாளையம் ஆகிய 3 ஊராட்சிகள் மற்றும் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியின் 12 வது வார்டின் ஒரு பகுதி ( வரதராஜபுரம் கிழக்கு தெரு ), புதுப்பட்டி பேரூராட்சி 5 வது வார்டின் ஒரு பகுதி உதயம் நகர் ஆகிவை கம்பம் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசின் அறிவுரைப்படி, கம்பம் நகராட்சியின் சிறப்பு கூட்டம் நாளை ( டிச. 11) மாலை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இது தொடர்பான கருத்துருவை ஒரு மனதாக நிறைவேற்றி அரசிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கம்பம் நகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்படுகிறது. ஆனால் மாவட்டத்திலேயே சின்னஞ்சிறிய ஒன்றியமாக உள்ள கம்பம் ஒன்றியத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிகளை கூடலூர் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.