துணை மின் நிலையம் அமைப்பது.. . எப்போது: சின்னமனுாரில் மின் தடையால் அவதி
சின்னமனுார்: சின்னமனுாரில் மின்வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், இடம் தேர்வு செய்யப்படாததால் துணை மின் நிலையம் அமைப்பதில் இழுபறி தொடர்கிறது.
மின் விநியோகத்தில் சீரான நிலை, சரியான அளவில் மின் அழுத்தம், அடிக்கடி சப்ளை தடங்கலின்றி கிடைப்பது போன்றவற்றை உறுதி செய்யவே துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், வண்ணாத்தி பாறை, மார்க்கையன்கோட்டை, பெரியகுளம், மதுராபுரி உள்ளிட்ட பல ஊர்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டத்தில் துணை மின் நிலையம் இல்லாத நகராட்சி என்ற பெருமையை சின்னமனுார் பெற்றுள்ளது.
இங்கு துணை மின் நிலையம் அமைக்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இடத்தேர்வில் தொடர்ந்து சிக்கல் இருப்பதால், துணை மின் நிலையம் அமைக்க முடியவில்லை.
இதனால் அடிக்கடி மின் தடை, சரியான அழுத்தத்தில் சப்ளை இல்லாதது, திடீர் திடீரென சப்ளை நின்று போவது அரங்கேறி வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் இங்கு துணை மின் நிலையம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.துணை மின் நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் குழுவினர் ஏற்கனவே 3 இடங்கள் பார்த்த நிலையில், அவை நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள் இருந்ததால், சரியாத இடத்தை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் துணை மின் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது. குறிப்பாக சின்னமனுார் மின்வாரிய டிவிஷன் தலைமையகமாக உள்ளது.
இப்பகுதியில் பணிகளை துரிதப்படுத்த கோட்ட மேற்பார்வை பொறியாளர், டிவிஷன் செயற்பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
அப்போதுதான் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவது குறையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.