Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஊர்வலத்தில் போலீஸ் தடியடி: 30 பேர் காயம்

தேனியில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன் தினம் இரவு நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் விதிகளை மீறி பிற பாடல்களை ஒலிபரப்பியதை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையை தவிர்க்க போலீசார் தடியடி நடத்தியதில் 30 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி., பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி நிர்வாகிகள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன் தினம் இரவு 9:30 மணியளவில் பொம்மையக்கவுண்டன்பட்டியில் 54 விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் துவங்கியது. கால்நடை மருத்துவமனை அருகே வரும்போது விதி மீறி பக்தி பாடலை தவிர்த்து பிற சமூகத்தினரை பாதிக்கும் வகையில் பாடல் ஒலி பரப்பானது. டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் பாடல் ஒலி பரப்பை நிறுத்தும்படி கூறினர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மறுக்கவே பிரச்னை ஏற்பட்டது. அதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதில் தேனி எம்.ஜி.ஆர்., நகர் நவநீதகிருஷ்ணன் மகன் தியாஸ் 4, பாரஸ்ட் ரோடு 5வது தெரு ஆனந்த் 23, ரஞ்சித் 17, பிரவீன்குமார் 16, சைலேஷ் 16, மணிகண்டன் 16, கோட்டைக்களம் ஈஸ்வரன் 36, வீரபாண்டி பாலமுருகன் 22, பொம்மையக்கவுண்டன்பட்டி ராஜேஷ் 18, ஜனா 18, கவுதம் 17, ஆத்தியப்பன் 28, உட்பட 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அல்லிநகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

தடியடி சம்பவத்திற்கு காரணமான டி.எஸ்.பி., பார்த்திபன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து முன்னனி மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் உமையராஜன், நகர் தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று காலை தேனி எஸ்.பி., அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் புகார் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *