பயிர்கள் வளர்ச்சி இல்லாததால் விவசாயிகள் கவலை : மானாவாரி சாகுபடிக்கு மழை கை கொடுக்காததால் ஏமாற்றம்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் நடப்பு ஆண்டில் மானாவாரி சாகுபடிக்கு மழை கை கொடுக்காததால் முளைத்த பயிர்கள் வளர்ச்சி பெறவில்லை. மானாவாரியில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகாவில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளன. விவசாயத்தில் மானாவாரியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நடப்பு பருவத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள், மொச்சை, தட்டை, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள், நிலக்கடலை, எள், ஆமணக்கு உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் விதைப்பு செய்தனர். ஆடிப்பட்ட விதைப்பில் எதிர்பார்த்த மழை இல்லாததால் விதைப்பு தாமதமானது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விதைப்பை தொடர்ந்தனர். முளைத்த பயிர்களுக்கு தக்க பருவத்தில் போதுமான மழை கிடைக்காததால் பயிர்கள் வளர்ச்சி பாதித்துள்ளது. சிறு தானிய பயிர்கள் முளைத்து இரண்டு அடி வரை வளர்ந்துள்ளது
பெரும்பாலான நிலங்களில் கதிர் பிடிக்கும் நிலைக்கு பயிர்கள் வளரவில்லை. இதேபோல் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களிலும் போதுமான வளர்ச்சி இல்லை.
துவரை செடிகள் பல இடங்களில் பூக்கும் பருவத்தை எட்டி உள்ளது. தற்போது இப்பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் வேண்டி உள்ளது. அதற்கான மழையும் தற்போது ஆண்டிபட்டி பகுதியில் இல்லை. இதனால் முளைத்து வளர்ந்த பயிர்களை பார்த்து மானாவாரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: தற்போது மழைக்கான சூழல் மாறி வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் பனியின் தாக்கம் துவங்கிவிடும். பனியின் தாக்கத்தால் வளர்ந்த பயிர்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே இடுபொருட்கள் விலை உயர்வு, விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் சிரமப்படும் விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கூறினர்.