சீரமைப்பு பணிக்காக பெரியாறு அணையில் நீர் நிறுத்தம் – மாலையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
கூடலுார் அருகே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக நேற்று காலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்து மாலையில் மீண்டும் திறக்கப்பட்டது.
கூடலுார் அருகே ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட நான்கு கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றில் உள்ள உறை கிணற்றிலிருந்து பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்லும் சேதமடைந்த குழாயை சீரமைப்பதற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 800 கன அடி நீர் நேற்று காலையில் நிறுத்தப்பட்டது. அதன்பின் சீரமைப்பு பணி முடிவடைந்து மாலையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 131.70 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 17.6 மி.மீ., தேக்கடியில் 1.6 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 944 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5094 மில்லியன் கன அடியாகும்.
அணையில் நேற்று நீர் நிறுத்தப்பட்டிருந்த போது லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 72 மெகாவாட் மின்உற்பத்தி தடைபட்டது. மாலையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.