பாக்கு மரங்கள் வளர்ப்பதில் குரங்கணி விவசாயிகள் ஆர்வம்
போடி குரங்கணி மலைப் பகுதியில் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் வீட்டில் இருந்தபடி பாக்கு உரிக்கும் தொழிலில் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
போடி பகுதியில் குரங்கணி, கொட்டகுடி, முந்தல், பிச்சாங்கரை, ஊத்தாம்பாறை, கொம்பு தூக்கி உள்ளிட்ட மலைப் பகுதியில் பாக்கு மரங்கள் வளர்த்து வருகின்றனர்.
பாக்கு மரத்தை நாற்று வைத்து வளர்த்தால் 3 ஆண்டுகளில் பலன் தர துவங்கி விடும்.
பாக்கு ஜூன் மாதம் துவங்கி ஜனவரி இறுதி வரை பலன் இருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன் உரிக்காத பாக்கு கிலோ ரூ.25 முதல் 30 வரை இருந்தது.
தற்போது கிலோ ரூ.45 முதல் 50 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
உரிக்காத பாக்கினை அரிவாள்மனை, கத்தி மூலம் அறுத்து கொட்டை பாக்கு, சுருள் பாக்கு என சிறிது, சிறிதாக அறுத்து தரம் பிரிக்கின்றனர். இவர்கள் குறைந்தது நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் 200 வரையும், வீட்டில் வேலை இல்லாத போது ரூ. 300 வரை பெண்கள் வருவாய் ஈட்டுகின்றனர். மாதத்திற்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை வருமானம் பார்க்கின்றனர்.
இத்தொழிலில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். பாக்கிற்கு நல்ல விலை கிடைப்பதால் பாக்கு மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.