பதவி உயர்வு பெறுவதில் வருவாய்த்துறை சங்கங்களுக்கு இடையே பிரச்னை
மாவட்டத்தில் கடந்தாண்டு அக்டோபரில் துணை தாசில்தார் பணியிடத்திற்காக வெளியிட்ட முதுநிலை பட்டியல் தொடர்பாக வருவாய்துறை அலுவலர் சங்கத்தினருக்கும், வருவாய்த்துறை(குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 17 துணை தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இரு சங்கத்தினரும் சீனியாரிட்டி பட்டியலுக்கு ஆதரவு, எதிர்ப்பு என ஜூலையில் போஸ்டர் யுத்தம் நடத்தினர். செப்.,10ல் துணைத்தாசில்தார் சீனியாரிட்டி பட்டியலை ரத்து செய்ய கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணாவும்,செப்.,16ல்184 பேர் தற்செயல் விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
முரண்பாடு:
வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ‘பதவி உயர்வு வழங்கும் போது (1:2 விகிதத்தில்) அதாவது குரூப் 2 நேரடி நியமன அலுவலர் ஒருவர், வருவாய் துறை பதவி உயர்வு பணியாளர்கள் இருவர் வீதம் வழங்க வேண்டும். ஆனால், கடந்தாண்டு துணை தாசில்தார் பணியிடத்திற்கான சீனியாரிட்டி பட்டியல் முரண்பாடாக வெளியிடப்பட்டது. அதனை ரத்து செய்ய கோரினோம். அதற்காக மாவட்ட நிர்வாகம் சென்னை வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் தெளிவுரை கேட்டனர். இதுவரை பதில் இல்லை மாவட்ட நிர்வாகமும் பட்டியலை ரத்து செய்ய வில்லை. சரியான பட்டியலை வெளியிட வேண்டும். என்றார்.
வருவாய்த்துறை(குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் பாலமுருகன் கூறுகையில், குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு வருபவர்களுக்கு 5 ஆண்டுகளில் துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்தில் குரூப் 2 தேர்வில்2012 டிச.,ல் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பதவி உயர்வு வழங்க வில்லை. அரசுப்பணியாளர் விதி ’14’ யை பின்பற்றி சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அந்த விதிக்கான தெளிவுரையுடன் பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது. இங்கு தெளிவுரை கிடைக்காததால், பதவி உயர்வு பட்டியல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தயாரித்த பட்டியலை வரவேற்கிறோம் என்றார்.இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.