நிறுவனங்கள் பணியாளர்கள் விபரம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
கடைகள், நிறுவனங்கள் பணியாளர்கள் விபரங்களை தொழிலாளர் நலத்துறை இணைய தளத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் கூறி உள்ளதாவது, மாவட்டத்தில் 2024 ஜூலை 2க்கு பின் துவக்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில் பத்து அல்லது அதற்கு மேல் பணியாளர்கள் பணிபுரிந்தால், கடை உரிமையாளர்கள் துறையின் https:// labour.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் உரிமையாளரின் விபரங்கள், பணியாளர் ஆதார், அலைபேசி எண் உள்ளிட்டவற்றுடன் படிவம்’Y’ பதிவு செய்ய வேண்டும். அதற்கு ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பித்து 24 மணி நேரத்தில் துறை ஆய்வாளர் நிறுவனத்தில் ஆய்வு செய்து பதிவு சான்றிதழ் வழங்குவார். அல்லது பதிவு செய்து 24 மணிநேரத்தில் தானாக பதிவுச்சான்றிதழ் வழங்கப்படும்.
ஜூலை 2க்கு முன்பிருந்து இயங்கி வரும் நிறுவனங்கள் பணியாளர்கள் பற்றி விபரங்களை இணையத்தில் பூர்த்தி செய்து படிவம் ‘ZB’ சமர்ப்பிக்க வேண்டும்.
சரிபார்த்த பின் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என உள்ளது.தொழிலாளர் துறையினர் கூறுகையில், கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பற்றிய தரவுகளை அறிந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.