இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
உத்தமபாளையம்: கோம்பையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பல்வேறு ஊர்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான வண்டிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
கோம்பை மறைந்த ஜமீன்தார் அப்பாஜி ராஜ்குமார் நினைவாக கோம்பை ஊர் பொது மக்கள் சார்பில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று காலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோம்பை ஜமீன்தார் சீனிவாசராயர் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். எம்.பி. தங்கதமிழ்செல்வன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
காலை 6:00 மணிக்கு துவங்கிய போட்டிகள் மதியம் வரை நடந்தது. கோம்பை சிக்கச்சியம்மன் கோயிலில் துவங்கி உத்தமபாளையம் வழியாக அம்பாசமுத்திரம் வரை போட்டி நடத்த துாரம் நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான், இளஞ்சிட்டு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 10 க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம் என ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேனி மாவட்ட காளைகள் வளர்ப்போர் ஒருங்கிணைந்த சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்