தேவிகுளம் தாலுகாவில் அக்.8ல் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு
தேவிகுளம் தாலுகாவில் அக்.8ல் பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்த தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோட்டின் இருபுறமும் ஆபத்தான நிலையில் மரங்கள் ஏராளம் உள்ளன. அவை மழை காலங்களில் வாகனங்கள் மீது விழுந்து விபத்துகள் ஏற்பட்டன. தவிர ரோட்டில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்தனர். அவற்றை அகற்றக் கோரி போராட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு துவங்கப்பட்டது.
உத்தரவு: ஆபத்தான மரங்களை அகற்றுமாறு கேரள உயர் நீதிமன்றம் வருவாய், வனம் ஆகிய துறையினருக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை.
ஆலோசனை கூட்டம்: அடிமாலியில் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம், தலைவர் பேபி தலைமையில் நடந்தது. இடுக்கி எம்.பி. டீன்குரியாகோஸ், தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
கேரள உயர் நீதிமன்றம் உத்தரவுபடி மரங்களை வெட்டி அகற்றவில்லை என்றால் அக்.8ல் தேவிகுளம் தாலுகா அளவில் பொது வேலை நிறுத்த போராட்டமும், அன்று வாளரா பகுதியில் ரோடு மறியல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.