ஆமை வேகம்; குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி- ;
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்கி ஓராண்டு ஆகியும் முடிவடையவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் துவங்கும் சபரிமலை சீசனுக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடுமா என்று எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. ஆனால் தமிழக பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. ரோட்டிலேயே சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. சபரிமலை சீசனில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இவ்வழியாக வந்து செல்கின்றனர். பயணிகளை ஏற்றுவதற்காக குமுளி வரை சென்று திரும்பும் அரசு பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் சபரிமலை சீசனில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட் வசதி அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க 2022 ல் முதல்வர் ஸ்டாலின் ரூ.7.30 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் போக்குவரத்து துறை சார்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி செய்வது எனவும் அதற்காக அத்துறை சார்பில் ரூ 5.5 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்து, இதற்கான பூமி பூஜை 2023 செப். 11 ல் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை கட்டட பணிகள் கூட முடிவடையவில்லை. அவசியம் கருதி பணிகளை துரிதப்படுத்த இதுவரை போக்குவரத்துறை அதிகாரிகள் முன் வரவில்லை. பெயரளவிற்கு அவ்வப்போது வந்து பார்வையிட்டு செல்கிறார். சபரிமலை சீசன் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.