ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். அவர் நலமுடன் உள்ளார்’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரஜினி இன்று வீடு திரும்புவார்
நடிகர் ரஜினி ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அவருக்கு சீரற்ற ரத்த ஓட்டம், செரிமானக் கோளாறுகள் உள்ள நிலையில் நேற்று இரவு வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பார், பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. பரிசோதனைக்கு பிறகு இன்றே வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
‘ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய, உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்’ என கவர்னர் ரவி, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட திரையுலகினர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
‘நடிகர் ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். அவர் நலமுடன் உள்ளார்’ என நிருபர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.