மருந்து தெளிக்க ‘ட்ரோன் ‘ வசதி
தேனி: வேளாண் பொறியியல் துறையில் 10லி., கொள்ளளவு கொண்ட ‘ட்ரோனை’ மருந்து தெளிக்க விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு கலெக்டர் நிதியில் இருந்து 10லி., கொள்ளளவு கொண்ட ‘ட்ரோன்’ சில மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம், காய்கறிகள், கரும்பு உள்ளிட்டவற்றிற்கு மருந்து தெளிக்கலாம். பொதுவாக ட்ரோன் பயன்படுத்துவதால், மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, சுவாச பாதிப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம். மேலும் விரைவாக மருந்து தெளிக்க முடியும்.
வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், துறை சார்பில் மருந்து தெளிக்க ‘ட்ரோன்’ வாடகைக்கு விடப்படுகிறது. ஒரு டேங்க் மருந்து தெளிக்க ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு டேங் மருந்தினை 0.75 ஏக்கர் பரப்பிற்கு 10 நிமிடத்திற்குள் தெளிக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்தில் 8 ஏக்கருக்கு மருந்து தெளிக்க முடியும். ஒரே பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 2,3 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 94431 02313 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.