Wednesday, April 16, 2025
Uncategorized

மாவட்டத்தில் காய்ச்சல் பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்பு

கம்பம்: மாவட்டத்தில் பலரும் காய்ச்சல் பாதித்து இருவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் என்ன வகை காய்ச்சல் பரவுகிறது என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதுடன் தடுப்பு நடவடிக்கை சுகாதாரத் துறை தீவிரப்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது. சில நாட்களில் கம்பத்தில் பள்ளி மாணவர், உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் அருகே 8 வயது சிறுமி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

பேரூராட்சி , நகராட்சிகளில் காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா, இருந்தால் என்ன வகை காய்ச்சல், எத்தனை நாளாக உள்ளது போன்ற தகவல்களை சேகரித்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிப்பார்கள்.

இவ் விபரங்கள் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் கண்காணிப்பிற்கு உட்படுத்தி, அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி குணப்படுத்துவார்கள். ஆனால் சமீபத்தில் மஸ்தூர் பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று விபரம் சேகரிக்காததால் காய்ச்சல் பாதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியாமல் உள்ளது.

கம்பம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலில் 3 நாள் சிகிச்சையில் இருந்த பள்ளி மாணவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டவுடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அந்த மாணவரை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்து காப்பாற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம், தகவல் தர வேண்டிய கம்பம் நகராட்சி சுகாதாரப் பிரிவும் தங்களின் கடமை செய்ய தவறியுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். என்ன காய்ச்சல் என்பதே தெரியாத நிலையும், உயிரிழப்புகள் அரங்கேறி வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கவனம் செலுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *