மாட்டுபட்டி அணையில் யானைகளை கண்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
மூணாறு: மாட்டுபட்டி அணை பகுதியில் ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு நடமாடிய காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து, மகிழ்ந்தனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலாப் பகுதியாகும். அப்பகுதியில் உள்ள மாட்டு பண்ணைக்கு பசுக்களின் தீவனத்திற்கு அணையின் கரையோரம் நுாற்றுக் கணக்கான ஏக்கரில் புற்கள் வளர்க்கப்படுகின்றன.
அங்கு வரும் காட்டு யானைகள் நன்கு தீவனம் கிடைக்கும் என்பதால் நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம்.
அதன்படி அப்பகுதியில் நான்கு காட்டு யானைகளை கொண்ட கூட்டம் முகாமிட்டு இருந்தன. அவை அணையில் நீந்தி மறு கரையில் உள்ள குண்டளை சாண்டோஸ் நகருக்கு சென்றது.
அங்கு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக முகாமிட்டவை, அவர்கள் சாகுபடி செய்துள்ள பீன்ஸ் வகைகளை குறிவைத்து நடமாடின.
அவற்றை பாதுகாக்க மலைவாழ் மக்கள் கடுமையாக போராடிய நிலையில், அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்த யானை கூட்டம் மீண்டும் நேற்று அணையில் நீந்தி மறு கரைக்கு வந்தன.
அவற்றை ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.