மாடித்தோட்ட பராமரிப்பில் அசத்தும் தம்பதி : கொத்து கொத்தாய் காய்க்கும் பெரிய இலந்தை பழம், மினி ஆரஞ்சு
மாடித்தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்வதுடன், அடுத்த சாகுபடிக்கு தேவையான விதைகளை தாங்களே அறுவடை செய்து அசத்துகின்றனர் தேனி பயர் சர்வீஸ் ஓடைத் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன மேலாளர் சண்முகநாதன் கண்ணீஸ்வரி தம்பதி.
மாடித்தோட்டம் அமைத்து அதில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்வது பயனுள்ளதாகும். தற்போது நகர் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்து பராமரிப்பது அதிகரித்து வருகிறது. பலரும் வீடுகளில் காய்கறிகள், கீரைகள், பிரண்டை உள்ளிட்ட மூலிகை தாவரங்களை வளர்க்க துவங்கி உள்ளனர். பலரும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். நமக்கு தேவையான காய்கறிகளை எந்த செயற்கை உரங்களும் இன்றி, வீட்டு குப்பையை உரமாக்கி மாடித்தோட்டத்திற்கு பயன்படுத்துவது நல்லது. இதனால் நமக்கு இயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.
தேனி சண்முகநாதன் கண்ணீஸ்வரி தம்பதி. இவர்கள் தங்களது வீட்டின் மாடியில் தக்காளி, கத்தரி, மிளகாய், பீர்க்கங்காய், புடலை, உள்ளிட்ட காய்கறிகள், பழச்செடிகளில் எலுமிச்சை, கொய்யா, டிராகன் புரூட், செர்ரீ, மாதுளை, பெரிய இலந்தை, மினி ஆரஞ்சு உள்ளிட்ட பழச்செடிகள், கறிவேப்பிலை, புதினா, சிறுகீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு வீட்டிற்கு தேவையான பயிர்களை மாடியில் குறுகிய இடத்தில் சாகுபடி செய்கின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் விதைகள் பயிரிடுவதால் மாதந்தோறும் அறுவடையும் செய்கின்றனர். மாடியில் விலையும் கத்தரி, மிளகாய் செடிகளில் இருந்தே விதைகளையும் எடுத்து, மீண்டும் பயிரிடுகின்றனர்.
தாவர வளர்ச்சிக்கு மீன் அமிலம், தே.மோ., கரைசல்
சண்முகநாதன், தனியார் நிறுவன மேலாளர், தேனி: நாங்கள் இருவருமே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது நகர் பகுதியில் வசித்தாலும் பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் இரு ஆண்டுகளுக்கு முன் சிறு, சிறு தொட்டிகளில் காய்கறி, பழச்செடிகள் வளர்க்க துவங்கினோம். இப்போது 32க்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான செடிகளை வளர்க்கின்றோம். செடிகள் வளர்க்க நகராட்சியில் கிடைக்கும் உரம், வீட்டில் மீன் கழிவு, நாட்டுச் சக்கரை பயன்படுத்தி மீன் அமிலம், தேங்காய்பால், மோர் கலந்து தே.மோ., கரைசல் தயாரிக்கின்றோம். இதனை செடிகளுக்கு தெளிக்கின்றோம். இவை செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி, செடிகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தவிர வீட்டு காய்கறி கழிவுகளையும் உரமாக பயன்படுத்துகின்றோம்., என்றார்.
ஆர்வம், தினசரி பராமரிப்பு
கண்ணீஸ்வரி, இல்லத் தரசி, தேனி : தினமும் மாடித்தோட்டத்தை பராமரிப்பேன். பூச்சிகள், நோய் தாக்கம் தெரிந்தால், காலை அல்லது மாலை நேரத்தில் தயாரித்து வைத்துள்ள மீன் அமிலம், தே.மோ., கரைசல், முட்டை கரைசலை தெளிப்பேன்.
கத்தரி, மிளகாய், வெண்டிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளை பறிக்காமல் விட்டு விடுவோம். அவை நன்கு காய்ந்து வரும், அதிலிருந்து விதைகள் எடுத்து மீண்டும் பயன்படுத்துகின்றோம்.
மாடித்தோட்டத்தில் வளர்க்கும் சில செடிகளின் நாற்றுகளை அன்னஞ்சி பகுதியில் உள்ள பண்ணையிலும், சில செடிகளை ஆன்லைன் மூலமும் வாங்குகிறேன். மினி ஆரஞ்சு செடி ஆன்லைனில் வாங்கினேன். தற்போது காய்க்க துவங்கி உள்ளது. மாடித்தோட்டம் வளர்ப்பில் ஆர்வமும், தினசரி பராமரிப்பும் இருந்தால் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் அறுவடை செய்ய முடியும் என்றார்