33′ பிளாக் ஸ்பாட் ‘ *மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் *ஆண்டுதோறும் நுாறு பேர் உயிரிழப்பு
தேனி: தேனி மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் பகுதி என 33 இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்’ என கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 950 விபத்துக்களில் ஆண்டு தோறும் நுாற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
தேனி மாவட்டம், கேரள மாநில எல்லையருகே அமைந்துள்ளது. மாவட்டத்தின் வழியாக கொச்சி-தனுஷ்கோடி, திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்தள்ளது. இந்த ரோடு வழியாக கேரளாவிற்கு சுற்றுலா, சபரிமலை ஐயப்பன் கோயில்களுக்கு செல்வோரின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என 24 நான்கு மணி நேரமும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் 33 இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்’ ஆக கண்டறியப்பட்டுள்ளன.
விபத்து இடங்கள் எவை: தேனி தாலுகாவில் சுக்குவாடன்பட்டி-பொம்மையகவுண்டன்பட்டி, போடிவிலக்கு முத்துதேவன்பட்டி, போடேந்திரபுரம் விலக்கு, கோட்டூர், உப்பார்பட்டி விலக்கு, அரண்மனைப்புதுார் விலக்கு, சின்னமனுார் ரோடு வெங்கடாசலபுரம் சந்திப்பு, போடி தாலுகாவில் சாலைகாளியம்மன்கோயில், கட்டபொம்மன் சிலை அருகே, செண்பகராமன்தோப்பு அருகே, குரங்கணிரோடு, பெருமாள் கவுண்டன்பட்டி சந்திப்பு, ஆண்டிபட்டி தாலுகாவில் எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பு, ஏத்தகோவில்ரோடு சந்திப்பு, ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகர்மஹால் அருகே, சிங்கராஜபுரம் ஓட்டணை ரோடு, கடமலைக்குண்டு அய்யனார் கோவில், க.விலக்கு சந்திப்பு முத்தனம்பட்டி விலக்கு, அரசு மருத்துவக்கல்லுாரி அருகில், சிலோன்காலனி, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார், பந்துவார்பட்டி பிரிவு, கரட்டுபட்டி அருகே, பெரியகுளம் தாலுகாவில் பழைய ஆர்.டி.ஓ., ஆபிஸ் ரோடு, கைலாசபட்டி வளைவு, கல்லுாரி விலக்கு, சருத்துப்பட்டி சந்திப்பு, உத்தமபாளையம் தாலுகாவில் காமாட்சிபுரம்- வெங்கடாசலபுரம் ரோடு, கம்பம் ஆர்.எம்.டி.சி., டெப்போ அருகே, கே.கே.,பட்டி முல்லைபெரியாறு ஆற்றுபாலம் ஆகிய பகுதிகளாக இடம் பெற்றுள்ளன.
பலியாகும் உயிர்கள்
இந்த பகுதிகளில் 2019 முதல் 2024 வரை சுமார் 950 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த இடங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 330 பேர் வரை இறந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளன. இது தவிர பிற பகுதிகளில் நடக்கும் விபத்துக்களில் ஆண்டுதோறும் நுாறுபேர் வரை உயிரிழக்கின்றனர். கண்டறியப்பட்ட பிளாக்ஸ்பாட் பகுதிகளில் விபத்துக்களை குறைக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதே விபத்தை தவிர்ப்பதற்கு வழி வகுக்கும் என போலீசார் தெரிவித்தனர்.