ரேஷன் வினியோகம் இடமலைகுடி ஊராட்சியில் துவங்கியது
மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் 20 நாட்களாக முடங்கிய ரேஷன் பொருட்கள் வினியோகம் கலெக்டர் விக்னேஸ்வரியின் தலையிட்டால் துவங்கியது.
மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்கு என உருவாக்கப்பட்ட இடமலைகுடி ஊராட்சியில் கடந்த 20 நாட்களாக ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது.
அதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல வாகனம் ஒப்பந்தமிடுவது தொடர்பாக முடிவு எட்டப்படாததால் பொருட்கள் கொண்டு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்பிரச்னை கலெக்டர் விக்னேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. அவர் ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு ராஜமலை பெட்டிமுடி குடோனில் இருந்து 5 டன் அரிசி உள்பட ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் துவங்கியது.
முன்னதாக கலெக்டர் உத்தரவுபடி இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் கிரிஜன் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள், தேவிகுளம் தாலுகா வழங்கல்துறை அதிகாரி ஆகியோர் இடமலைகுடி ஊராட்சியில் சொசைட்டிகுடி, பரப்பியாறுகுடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்தனர். முடங்கிய ரேஷன் பொருட்கள் வினியோகம் துவங்கியதால் மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்தனர்.