நிறுத்திய டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கம்
ஆண்டிபட்டி : கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்கள் தினமலர் செய்தி எதிரொலியால் ஆண்டிபட்டியில் இருந்து கிராமங்களுக்கு மீண்டும் இயக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் இருந்து 8 கி.மீ., தூரம் உள்ள ஏத்தக்கோவில் கிராமத்திற்கு சென்னமநாயக்கன்பட்டி, மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, மேக்கிழார்பட்டி, ரெங்காரம்பட்டி, சித்தயகவுண்டன்பட்டி வழியாக டவுன் பஸ் வசதி இருந்தது. கிராம மக்கள் விவசாயம் அதனை சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பை மட்டுமே தொழில்களாக கொண்டுள்ளனர். பெரியகுளம் கிளையிலிருந்து ஆண்டிபட்டி வழியாக அதிகாலை 5:15 மணிக்கு போடிதாசன்பட்டிக்கும், காலை 7:30, இரவு 9:30 மணிக்கு ஏத்தக்கோயில் கிராமத்திற்கும், தேனி கிளையிலிருந்து ஆண்டிபட்டி வழியாக ஏத்தக்கோயில் கிராமத்திற்கு இரவு 10:05 மணிக்கும் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்ட பின்பும் இந்த பஸ்கள் இயக்கப்படாததால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். இது தொடர்பான செய்தி தினமலரில் கடந்த செப்., 29ல் வெளியானது. இப்பகுதி மக்களும் தொடர்ந்து தமிழக அரசுக்கும் போக்குவரத்து நிர்வாகத்திற்கும் மனுக்கள் கொடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்கள் இப்பகுதியில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் தமிழக அரசுக்கும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.