வெள்ளை கழுத்து நாரையை பார்த்து அதிசயித்த மக்கள்
மூணாறு: இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே தேக்கின்கானம் பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள வெள்ளை கழுத்து நாரை நடமாடியது.
இந்த வகை நாரை ஆப்பிரிக்காவை சேர்ந்தது என்றபோதும் இந்தியா, இந்தோனேஷியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சிகோனியா பறவை குடும்பத்தைச் சேர்ந்த நாரையை ஏசியன் உல்லி நெக் ஸ்டோர்க் என அழைக்கின்றனர். அதனை தமிழில் வெள்ளை கழுத்து, கம்பளி கழுத்து நாரை என அழைக்கப்படுகிறது. அவை அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஈரம், சதுப்பு நிலம் மற்றும் ஆறு, குளம் உள்பட நீர் நிலைகளிலும் காணப்படும். மீன், தவளை, தேரை, பாம்பு, பல்லி ஆகியவை உணவாகும்.
மிகவும் அபூர்வமாக தென்படும் வெள்ளை கழுத்து நாரை நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டம், ராஜாக்காடு அருகே தேக்கின்கானம் பகுதியில் ரோட்டில் காணப்பட்டது. அதன் அருகில் மக்கள் நடந்து சென்றபோதும் எவ்வித அச்சமும் இன்றி நடமாடியது. அந்த நாரையை பார்த்து மக்கள் அதிசயித்தனர்.