டூவீலர், ஜீப் மோதிய விபத்தில் மில் ஊழியர் மீது கார் ஏறி பலி
தேனி: தேனி அருகே டூவீலர், ஜீப்பில் மோதிய ரோட்டில் விழுந்த மில் ஊழியர் வினோத்குமார் மீது எதிரே வந்த கார் ஏறியதில் சம்பவ இடத்தில் பலியானார்.
வருஷநாடு குமணன்தொழுவை சேர்ந்த வினோத்குமார் 32, வடபுதுப்பட்டி தனியார் மில்லில் வேலை செய்தார். நேற்று காலை மாரியம்மன்கோவில்பட்டி பைபாஸ் அருகில் டூவீலரில் வீரபாண்டி நோக்கிச் சென்றார். இவருக்கு முன்பாக ஜீப் சென்றது. அந்த ஜீப்பை வினோத்குமார் முந்திச் சென்றார். எதிரே கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்த மணிகண்டன் 34, ஓட்டி வந்த டூவீலர் வந்தது.
அந்த டூவீலரில் மோதாமல் தவிர்க்க இடது புறமாக வினோத்குமார் டூவீலரை திருப்பினார். இதில் ஜீப்பின் வலதுபுற பக்கவாட்டில் மோதி ரோட்டில் விழுந்தார். ஜீப் நிற்காமல் சென்றது.
கீழே விழுந்தவருக்கு எதிரே, பழனிசெட்டிபட்டி சஞ்சய்காந்தி 3வது தெருவை சேர்ந்த முருகன் 58, ஓட்டி வந்த கார், கீழே விழுந்து கிடந்த வினோத்குமாரின் தலையில் ஏறி இறங்கியது.பின் மணிகண்டன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீதும் மோதி விபத்து நடந்தது. சம்பவ இடத்தில் வினோத்குமார் இறந்தார்.
மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டன. வினோத்குமாரின் உடலை கைப்பற்றிய பழனிசெட்டிபட்டி போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பினர். விபத்தால் திண்டுக்கல் — குமுளி பைபாஸ் ரோட்டில் 40 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதித்தது. நிற்காமல் சென்ற ஜீப் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.