கணிக்க முடியாமல் வனத்துறை திணறல்: மின்னலாய் சுற்றி திரியும் படையப்பா
மூணாறு: மூணாறை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் படையப்பா யானை மின்னலாய் சுற்றி வருவதால் தொழிலாளர்கள் இடையே அச்சம் அதிகரித்தது.
மூணாறு பகுதியில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். அந்த யானை காடு, வனம் ஆகியவற்றில் தீவனத்தை தேடுவதை விட, அதனை தேடி குடியிருப்பு, ரோடு ஆகிய பகுதிகளில் நடமாடுவது வழக்கம்
ஆரம்பத்தில் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் சென்று வந்த படையப்பா சமீப காலமாக தனது வழித்தடத்தை விரிவுபடுத்திக் கொண்டது.
குறிப்பாக ஆரம்பத்தில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகர் அருகில் உள்ள டி. எஸ்.பி. குடியிருப்பு முதல் 25 கி.மீ., தொலைவில் உள்ள வாகுவாரை எஸ்டேட் வரை சென்று வந்தது. தற்போது வாகுவாரை அடுத்துள்ள பாம்பன்மலை பகுதி வரையும், கூடாரவிளை, நெற்றிகுடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றது. இரு தினங்களுக்கு முன்பு லாக்காடு எஸ்டேட், மானிலை டிவிஷனில் பகலில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நடமாடியது.
நேற்று முன்தினம் இரவு கூடாரவிளை பகுதியில் நாடமாடிய படையப்பா காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியது. நேற்று பகலில் நெற்றிகுடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த யானை மதியம் 3:00 மணிக்கு பிறகு தேவிகுளம் எஸ்டேட், ஓ.டி.கே. டிவிஷன் பகுதிக்கு சென்றது. ஒரே நாளில் பல பகுதிகளுக்கு படையப்பா செல்வதால், அதனை கணிக்க இயலாமல் வனத்துறை திணறி வரும் நிலையில் தொழிலாளர்கள் இடையே அச்சம் அதிகரித்தது.