Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை: மரபணு மாற்றிய சீனா பூண்டு மார்க்கெட்டில் விற்கப்படுகிறதா,

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா, வடுகபட்டி வெள்ளைப்பூண்டு மார்க்கெட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சீனா பூண்டு விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

இமாச்சலப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விளையும் வெள்ளைப்பூண்டுகள் பெரியகுளம் அருகே வடுகபட்டி கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கு வாரத்தில் வியாழன், ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாரம் 100 டன் வீதம் வெள்ளைப்பூண்டுகள் விற்பனையாகிறது. நேற்றைய மார்க்கெட்டில் இமாச்சலப்பூண்டு முதல் ரகம் கிலோ ரூ.500க்கும், காஷ்மீர் பூண்டு ரூ.300க்கு விற்பனையானது.

சோதனை: சீனாவில் மரபணு மாற்றப்பட்ட பூண்டுகள் தயாரிக்கப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. சீனா பூண்டுகளை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உருவாகும். இதனை கண்டறிய நேற்று பூண்டு மார்க்கெட்டில் பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் தலைமையில் கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன், சின்னமனூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் கமிஷன் கடைகளில் இருந்த பூண்டு மூட்டைகளில் இருந்த வெள்ளைப்பூண்டு ரகங்களை 13 கடைகளிலும், 5 கோடவுன்களில் மாதிரிகள் சேகரித்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன் கூறியதாவது: பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட பூண்டு மாதிரிகள் மதுரை, சென்னை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. சோதனையில் சீனா பூண்டுகள் இல்லை என்றார்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *