காட்டு யானைகள் இடம் பெயர்ந்த மூணாறு பகுதிக்கு
மூணாறு: மூணாறு பகுதிக்கு இடம் பெயர்ந்த காட்டு யானைகள் பல பகுதிகளில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மூணாறு, தேவிகுளம் பகுதிகளில் ஒன்பது குட்டி யானைகள் மற்றும் படையப்பா, ஒற்றை கொம்பன்கள் உள்பட 39 காட்டு யானைகள் உள்ளன. அவை தவிர தற்போது புதிதாக காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
அவ்வாறு இடம் பெயர்ந்த காட்டு யானைகள் தற்போது ராஜமலை பெட்டிமுடி, பழைய மூணாறு, போதமேடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
அவை பைசன்வாலி, மாங்குளம் ஆகிய பகுதி களில் இருந்து இடம் பெயர்ந்து மூணாறு பகுதிக்கு வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
போதமேடு பகுதியில் முகாமிட்டுள்ள மூன்று குட்டிகள் உள்பட ஆறு யானைகளை கொண்ட கூட்டம் ஏலச் செடிகளை சேதப்படுத்தி வருகின்றன.
அதேபோல் பழைய மூணாறு பகுதியில் ஒரு குட்டி உள்பட ஏழு யானைகள், ராஜமலை பெட்டிமுடியில் ஒன்பது யானைகள் என கூட்டமாக முகாமிட்டுள்ளன.
மூன்று பகுதிகளிலும் முகாமிட்டுள்ள யானைகளை உள் வனங்களில் விரட்டும் முயற்சியில் மூணாறு வனத்துறை, பெட்டிமுடி அதிவிரைவு படை உள்பட பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடை சேதம்: இதனிடையே மாட்டுபட்டி பகுதியில் முகாமிட்டுள்ள படையப்பா, மாட்டுபட்டி அணை கட்டு பகுதியில் நான்கு கடைகளை சேதப்படுத்தியது.