பிப்ரவரியில் ரயில்வே கேட் மூட முடிவு : தேனி ரயில்வே மேம்பாலத்தில் கார்டர்கள் பொருத்தும் பணி தீவிரம்
தேனி : ரயில்வே மேம்பாலத்திற்கான கார்டர்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிப்., இறுதியில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடி பணிகள் நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் நடந்து முடிந்துள்ளது. சிப்காட் பகுதியில் மேம்பாலத்திற்கான துாண்கள் பணி நிறைவடைந்து விட்டது. அதில் கார்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. நேற்று திடீரென போக்குவரத்து மாற்றம் செய்து கார்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இது மேம்பால பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டால் மதுரை ரோட்டில் அரசு ஐ.டி.ஐ., அருகில் முன்னெச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா கூறுகையில்,’ கார்டர்கள் பொருத்தியதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சில மணி நேரத்தில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. சிப்காட் பகுதியில் கார்டர்கள் மேல் பகுதியில் மேம்பாலத்திற்கான தளம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேற்பகுதியில் மேம்பால பணிகள் துவங்க உள்ளது.
இதற்காக பிப்., இறுதியில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படஉள்ளது. ரயில்வே கேட் மூடிய பின் சுரங்கப்பாதை, ரயில்வே கேட் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது என்றார்.