துவரையில் தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த ஆலோசனை
தேனி : துவரையை தாக்கும் தண்டு, காய் துளைப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் ஆண்டு தோறும் 700 எக்டேரில் துவரை சாகுடி செய்யப்படுகிறது. ஆனால், இந்தாண்டு துவரை சாகுபடி பரப்பு அதிகரித்து 816 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு மாநில அரசு திட்டத்தில் ரூ.2500 மானியம், மத்திய அரசு திட்டத்தில் ரூ.7500 மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் சின்னமனுார், சீப்பாலக்கோட்டை, ஜங்கால்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் அதிக அளவில் துவரை சாகுபடி செய்யப்படுகிறது.
துவரையை காய்துளைப்பான், தண்டு துளைப்பான் புழுக்கள் தாக்கும் போது மகசூல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என வேளாண் துணை இயக்குநர் ராஜசேகரன் கூறியதாவது: துவரை சாகுடி செய்யப்பட்டுள்ள வயலில் எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்கலாம். ஒரு ஏக்கருக்கு அசாடார்டின் 2.5 லிட்டர் அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 220 கிராம் அல்லது புரோரோ தாரனில்போர் 150 மி.லி., தெளிக்கலாம். இதன் மூலம் துவரையில் துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். என்றார்.