வனவிலங்குகள் பாதிக்கும் அபாயம் : குமுளி மலைப்பாதையில் குவியு ம் பாலிதீன் கழிவுகள்
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்கள் வீசி செல்லும் பாலிதீன் கழிவுகளால் வனவிலங்குகள்பாதிக்கும் அபாயம் உள்ளது.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். சபரிமலை சீசன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகமாக வருகின்றன.
மலைப்பாதையில் பல இடங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மீதமுள்ள உணவுகள், பாலிதீன் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். குமுளி வனப்பகுதியில் மான்கள், குரங்குகள் அதிகம். உணவுடன்சேர்த்து பாலிதீன் கழிவுகளையும் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமுளி பஸ் ஸ்டாப் பகுதிகளில் தினந்தோறும் கூடலுார் நகராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் மலைப்பாதையில் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் வனத்துறையினர் எச்சரிக்கை பலகை அமைத்து மலைப்பாதையில் கழிவுகளை கொட்டாமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.