விலை தொடர் சரிவால் கவலையில் சாகுபடியாளர்கள் வடமாநிலங்களில் பனிப்பொழிவால் வெற்றிலை பயன்பாடு குறைந்தது
சின்னமனுார்: தேனி மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் கருப்பு, வெள்ளை வெற்றிலை அங்கு ஏற்பட்டுள்ள பனிப்பொழிவின் காரணமாக குறைந்துள்ளது. இந்நிலையில் உள்ளூர் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால் கொடிக்கால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தாம்பூலத்தில் முக்கிய பங்கு வகிப்பது வெற்றிலையாகும். மருத்துவ குணம் கொண்டது.அனைத்து விசேஷங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மாவட்டத்தில், கம்பம், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்டபகுதிகளில்சாகுபடியாகிறது. சின்னமனுார், பெரியகுளம் வட்டாரங்களில் வெள்ளை, கருப்பு வெற்றிலை சாகுபடியாகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன் கருப்பு வெற்றிலை ரூ.180,வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.280 வரை விற்றது.2 நாட்களில்கருப்பு வெற்றிலை விலை கிலோ ரூ.160, வெள்ளை வெற்றிலை ரூ.250க்கு விற்பனைஆனது.தற்போது வெள்ளை வெற்றிலை கிலோவிற்கு ரூ.30 எனகுறைந்து, ரூ.220க்கும்,கருப்பு வெற்றிலை கிலோவிற்கு ரூ.20 என, குறைந்து ரூ.140 என, சரிந்துள்ளது.
சின்னமனுார் வெற்றிலை சாகுபடியாளர் ரவி கூறியதாவது: கோயில் திருவிழாக்கள், முகூர்த்தங்கள் உள்ளிட்ட விசேஷங்கள் அதிகளவில் இல்லாததால் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது.வட மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படும் வெற்றிலை,பனிப்பொழிவு துவங்கியால் அம்மாநில மக்களின் பயன்பாடும் குறைந்துள்ளது. தேனியில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் வெற்றிலை அளவு 90 சதவீதம் குறைந்துள்ளது. உள்ளூரில்பொது மக்களின் நுகர்வு குறைவாக உள்ளது. அதே சமயம் கருப்பு வெற்றிலை வரத்து அதிகமாக உள்ளது. விற்பனை’டல்’அடிப்பதால், விலை குறைய துவங்கி உள்ளதுகவலையளிக்கிறது., என்றார்.