பெரியாறு அணை நீர்பிடிப்பில் கனமழை ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்வு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து நேற்று மாலை 124.40 அடியை எட்டியது.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108.20 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு 397 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 3153 கன அடியாக அதிகரித்தது.
அதன்பின் தொடர்ந்து கன மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 124.40 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 2756 மில்லியன் கன அடியாகும்.
அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 800 கன அடியாக இருந்த நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. லோயர்கேம்ப் நீர் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. குறைந்தது நீர் திறப்பு 200 கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும்.
மகிழ்ச்சி
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது இரண்டாம் போக நெல் நடவு பணிகள் முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் துவங்கிய கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.