போடி மெட்டு பாதையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்பு
போடி:தேனி மாவட்டம், போடி, கேரளா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் போடிமெட்டு மலைப் பாதையில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால் தேனி — மூணாறு போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தேனியில் இருந்து மூணாறுக்கு போடி மெட்டு மலைப்பாதை வழியே செல்ல வேண்டும். தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து 22 கி.மீ., சென்றால் போடிமெட்டு மலைப்பகுதி உள்ளது. போடி மெட்டு கடல் மட்டத்தில் இருந்து 4644 அடி உயரத்தில் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.17 கோடி செலவில் 18 அடி ரோடாக இருந்த முந்தல் – போடிமெட்டு ரோடு 24 அடியாக அகலப்படுத்தப்பட்டது. ரோடு அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்ததால், மழை காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கன மழையால் நேற்று காலை 6:00 மணி அளவில் போடிமெட்டு மலைப்பாதையில் 10, 11வது வளைவில் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. ரோட்டில் பள்ளம் ஏற்பட்டது. போடி — மூணாறு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளும், தொழிலாளர்களை தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களும் சிரமம் அடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் மண் அள்ளும் இயந்திரம் மூலம் சிறிய பாறைகள் அகற்றப்பட்டன. காலை 9:00 மணி முதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. ரோட்டில் விழுந்து உள்ள 20 டன் அளவு கொண்ட பெரிய பாறையை உடைத்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.