மக்காச்சோளம் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி ; தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வசதியால் மகசூல் அதிகரிப்பு
போடி : தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் விளைச்சல் ஏக்கருக்கு 32 குவிண்டால் மகசூலும், குவிண்டால் ரூ.2600 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மாவட்டத்தில் போடி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், காமராஜபுரம், அணைக்கரைப்பட்டி ராசிங்காபுரம். பூதிப்புரம் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம்
ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச் சோளம் சாகுபடியில் நோய் தாக்குதல் பாதிப்பு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் மற்ற பயிர்கள் பயிரிடுவதை காட்டிலும் மக்காச்சோளம் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்காச் சோளத்தில் பாப்கான், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் கான் போன்றவற்றிற்காக அதிகம் பயன் படுத்துகின்றனர். பதப்படுத்தி வேக வைத்து சாப்பிடவும், சத்து மாவு தயாரிப்பிற்காகவும், கோழி, கால்நடை தீவனங்களுக்கா பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது நல்ல விலை கிடைப்பதால் மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு போதிய விளைச்சல் இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 2200 முதல் ரூ.2400 வரை விலை இருந்தது. இந்த ஆண்டு விளைச்சல் மட்டும் இன்றி விலையும் அதிகரித்து உள்ளது. நன்கு விளைந்த, காய்ந்த நிலையில் உள்ள மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2500 முதல் ரூ. 2600 வரை விலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எம்.பெத்தணன், விவசாயி பத்திரகாளிபுரம் : மக்காச்சோளத்திற்கு போதிய அளவிற்கு தண்ணீர் வசதி தேவை. நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 28 முதல் 32 குவிண்டால் பலன் கிடைக்கும்.
போதிய விளைச்சல் இல்லாத நிலையில் மக்காச்சோளம் பருமன் இல்லாமல் இருக்கும். ஏக்கருக்கு 15 குவிண்டாலுக்கு கீழே கிடைக்கும்.
சமீபத்தில் பெய்து வரும் மழையால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி பகுதியில் ஏக்கருக்கு 32 குவிண்டால் வரை கிடைத்து வருகிறது.
தற்போது நல்ல விளைச்சல் ஈரப்பதம் இன்றி, காய்ந்த மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2500 முதல் 2600 வரை உள்ளது.