Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

பென்னி குவிக் மணி மண்டபத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் – வரலாற்றைக் காட்சிப்படுத்தாததால் ஏமாற்றம்

கூடலுார்: பள்ளித் தேர்வு விடுமுறையால் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அணை மற்றும் பென்னிகுவிக்கின் வரலாற்றை காட்சிப்படுத்தாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டி 2013 ஜன.15ல் திறப்பு விழா காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பயன்படுத்த முடியாத வகையில் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. குடிநீர் வசதி இல்லை. சில மாதங்களுக்கு முன் விவசாய சங்கம் சார்பில் வளாகத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அதுவும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

வரலாறு காட்சிப்படுத்தப்படவில்லை

மணிமண்டபத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரியாறு அணை மற்றும் பென்னிகுவிக் குறித்த வரலாறு இடம்பெறாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக மணிமண்டபத்தில் அணை குறித்த வரலாற்றை காட்சிப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பென்னிகுவிக்கின் வாழ்க்கை வரலாறும் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்

இதுவரை இது தொடர்பான நடவடிக்கை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பென்னிகுவிக்கின் சிலையை மட்டும் பார்த்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *