பெற்றோரை இழந்த குழந்தைகள் படிக்க ரூ.15.75 லட்சம் சமூக பாதுகாப்பு நிதி உதவி
தேனி: தேனி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் படிக்க சமூக பாதுகாப்பு நிதி ரூ.15.75 லட்சம் நிதி உதவியினை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தொழிற்சாலை, வணிக நிர்வாகங்கள் சார்பில் சமூக பாதுகாப்பிற்கென குறிப்பிட்ட நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். இந் நிதியின் மூலம் மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய கலெக்டர் ஷஜீவனா ஏற்பாடு செய்தார். இதன் படி சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தில் பெறப்பட்ட ரூ.15.75 லட்சத்தை குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் பெற்றோரை இழந்து படிக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டன.இதில் தாய், தந்தை இதில் யாராவது ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ.5ஆயிரம் என 195 பேருக்கும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 60 பேருக்கும் என 255 குழந்தைகளுக்கு ரூ.15.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்ட நிதியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது மாநிலத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தி உள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.